அன்பு ஒன்றே போதும்

3 0 0
                                    


நிலா மின்னும் இரவு நேரம், சாலை எங்கும் மயான அமைதி. வானுயர் அடுக்குமாடி குடியிருப்பில் அவன் வரவுக்காக காத்திருந்தாள் அவள். தினமும் இரவு 9 மணிக்கு வீடு திரும்பிவிடும் அவன், இன்று ஏனோ மணி 12 ஆகியும் வரவில்லை. அவனைத் தேடி செல்லவும் மனம் வரவில்லை.

எங்கு சென்று தேடுவது என்ற குழப்பம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் தனியாக இந்நேரம் வெளியே சென்றால் தனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ, அப்படி நேர்ந்தால் தன்னை யார் காப்பாற்றுவார் என்ற அச்சம், அவளை வீட்டினுள்ளே அடைந்து இருக்க செய்தது.

அறையின் இரவு விளக்கு மங்கலான ஒளியை வீச, ஏக்கமும் பதற்றமும் கலந்த நிலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாள் அவள். அவன் இல்லாமல் உணவும் உண்ணாது பசியில் வயிறு உறுமியது. கத்தியும் பயனில்லை என்பது அவள் நன்கு அறிந்த ஒன்று. பிறரை போல் கொடுமை படுத்தும் அரக்கனும் இல்லை அவன்.

இங்கு இந்த வீட்டிற்கு அவள் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஆனாலும், அவன் அவள் மீது அதீத அன்பு கொண்டுள்ளான். சிறுபிள்ளை போல் அரவணைத்து பாதுகாப்பாக பார்த்துக் கொள்பவன். அவன் இல்லா நொடிகள் அவனை நினைத்து அவள் மனம் ஏங்குகியது. மிக குறைந்த காலத்தில் ஒருவர் மீது தான் இவ்வளவு அன்பு வைத்தது இதுவே முதல் முறை. அதை நினைத்தால் அவளை அச்சமும் சேர்த்து ஆட்கொள்கிறது.

கால்களை கட்டி அனைத்து, தலை சாய்த்து, வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள். மணிக்கூண்டின் ஓசை மட்டும் ஆளில்லா அவ்வீட்டில் திகில் உண்டாக்குவது போல் எதிரொலித்தது. அவள் கண்ணில் நெஞ்சை உருக்குலைக்கும் தனிமையின் சாயல் தெளிவாய் பிரதிபலித்தது. கண் மூடி நினைவுகளில் மூழ்கினாள் அவள்.

அன்று... அவனைப் பார்த்த முதல் நாள்... கண்டதும் கொண்டாள் காதல் அவள்...

சாலை எங்கும் மக்கள் கூட்டம். தானியங்கி போல் பல கால்கள், அதன் போக்கில் வெவ்வேறு திசையில் சென்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை முகங்கள் அனைத்தும் கைபேசியில் புதைந்து இருந்தன. இயந்திரங்கள் போல் மக்கள் இங்கும் அங்கும் அசைய, ஏதோ ஓர் மூலையில் நன்கு அலங்கரித்த கண்ணாடி கடையில் தனி ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தாள் அவள்.

இயந்திர வாழ்க்கையில் தன் மீது எவரேனும் காதல் கொள்வார்களா என்ற எண்ணம் அவளை அடிக்கடி கலங்க வைத்தது. பலர் அக்கடைக்கு வந்து சென்றாலும், அனைவரின் கவனமும் கைபேசியில் அல்லது கொஞ்சி கூச்சலிடும் காதல் பறவைகள் மீது தான் இருந்தது.

நாட்கள் பல தனிமையில் சென்றது. தன்னம்பிக்கையை வேர் அவள் உள்ளத்தில் மெல்ல படர துவங்கியது. தனிமையில் தான் தனது வாழக்கை என்று முடிவு செய்தவள், தன் இருப்பிடத்தை விட்டு எழுத்து மெல்ல நகர்ந்தாள்.

மணியின் ஓசை கேட்டு அவளின் தலை நிமிர்ந்தது. நவீன காலணிகள், முக்கால் காற்சட்டை, கண் கூசாத மென்மையான வண்ண சட்டை அணிந்த ஒருவன் உள் நுழைந்த நொடி இருவரின் கண்களும் சந்தித்தது. அவன் கண்ணில் ஜொலித்த காதல் அவளை நொடியில் அவன் வலையில் விழச் செய்தது.

மெய் மறந்து அவனையே நோக்கினாள். அவனும் இவளை நோக்கினான். மற்றவரைப் போல் இவனும் தன்னை பார்த்து விட்டு, ஒதிக்கி விட்டு சென்று விடுவானோ என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் தனிமை மெல்ல எட்டி பார்த்தது. மலர்ந்த முகம் வாடிய நொடி அவன் கவனிக்க தவறவில்லை.

மெல்லிய பன் முறுவல் அவன் உதடை அலங்கரிக்க, கடை உரிமையாளருடன் உரையாடலில் ஈடுபட்டான். பின் அவளை நோக்கி அவன் கால்கள் நகர்ந்தது. அதைக் கண்ட அவளின் உள்ளமோ அதிவேகத்தில் துடித்தது. பல பட்டாம்பூச்சிகள் தன்னுள் பறப்பதை போல் உணர்ந்தாள்.

அவன் தன் முன் மண்டியிட்டு கண்ணோடு கண் பார்த்து, "இனி நீ என்னவள்" என்று முனுமுனுத்தான். மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவனை கட்டி அணைத்தாள்.

வீட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டு கண் முழித்து பார்த்தாள் அவள். அறை விளக்குகளை உயிர்பித்து, காலணிகளை கலட்டி உள்ளே நுழைந்தான் அவன். தன்னை அவன் விட்டு செல்லவில்லை. தன்னை அவன் வெறுக்கவில்லை என்று அவளுக்கு உறுதியானது.

முதல் நாள் பார்த்த அதே ஆனந்தம் அவளினுள் பரவ, அவன் அருகே வரும் வரை பொருத்திராது, துள்ளி குதித்து அவன் மீது தாவினாள். அவனோ, அதே உற்சாகத்தில் அவளை இருக்க கட்டிக்கொண்டான்.

நாள் முழுதும் வேலை செய்த சோர்வு பறந்து விட்டது,அவனின் செல்ல நாய்க்குட்டியை அவன் அரவணைக்கையில்.

Contest EntriesWhere stories live. Discover now